Chapter 21:
பிள்ளைகளின் உணவுப் பழக்கம் என்பது பெற்றோரின் வாழ்க்கை முறை மற்றும் வளர்ப்பு முறையினால் வடிவமைக்கப்படுகிறது. வீட்டிலுள்ள பெரியவர்கள், காய்கறிகள் சாப்பிட மறுத்து, சிப்ஸையும், நொறுக்குத் தீனிகளையும் கொறித்துக் கொண்டிருந்தால், பிள்ளைகள் மட்டும் எப்படி ஆரோக்கிய உணவுப்பழக்கத்துக்கு மாறுவார்கள்?
விடலைப் பருவம் என்பது பிள்ளைகளின் உடலில் ஹார்மோன் மாறுதல்களை உண்டாக்கி, அவர்களது வளர்ச்சியில் திடீரென நம்ப முடியாத மாற்றங்களைத் தரும் வயது. இந்த வயதில்தான், குழந்தைகள், உயரத்தில் 20 சதவிகிதமும், எடையில் 50 சதவிகிதமும் அதிகரிக்கிறார்கள். திடீரெனத் தீவிரமாகும் அந்த மாற்றங்களின் விளைவால், டீன் ஏஜில் பிள்ளைகளின் சத்துணவுத் தேவையும் அதிகரிக்கும். குறிப்பாக புரதம், கால்சியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகம் தேவைப்படும்.
சத்தில்லாத உணவு டீன் ஏஜ் பிள்ளைகளை பல வகைகளிலும் பாதிக்கும். அவர்களது படிப்பு, விளையாட்டு தவிர அவர்களது மனப்போக்கையும்கூட உணவு பாதிக்கும். டீன் ஏஜில் வளர்ச்சி என்பது பீறிட்டுக் கிளம்பும். அதை ஈடுகட்ட அவர்களுக்கு அதிக கலோரி தேவைப்படும். அந்த கலோரியானது சத்தான உணவின் மூலம் கிடைப்பதாக இருக்க வேண்டும். குழந்தைப் பருவத்துக்கு அடுத்தபடியாக மிகமிக ஆரோக்கியமாக சாப்பிட வேண்டிய வயது விடலைப் பருவம். ஆனால் பெரும்பாலான விடலைப் பிள்ளைகள் அதைப் பொருட்படுத்துவதே இல்லை.
சிலர் அதிகம் உண்பவர்களாக இருக்கிறார்கள். ஆனாலும் சத்தாக சாப்பிடுவதில்லை. தினம் தினம் வளர்ந்து கொண்டிருப்பதால், அவர்களுக்கு அதிக உணவு தேவைப்படுகிறது. அதிக உணவு என்பது ஆரோக்கியமான உணவு என்பதை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த வயதுப் பிள்ளைகள் பெரும்பாலான நேரம் வீட்டில் இருப்பதில்லை. எனவே வெளி உணவுகளையே அதிகம் உண்ண வேண்டிய கட்டாயம். அம்மா என்கிற ஊட்டச்சத்து நிபுணர் அருகில் இருந்து கண்காணிக்கவும் வாய்ப்பில்லை. டீன் ஏஜ் பிள்ளைகளின் விருப்ப உணவு ஃபாஸ்ட் ஃபுட். அதிலும் ஆரோக்கியத்துக்குக் கொஞ்சமும் உத்தரவாதமில்லாத, கொழுப்பு உணவுகள்....
விடலைப் பருவத்து ஆண் பிள்ளைகளுக்கு நிறைய சாப்பிட்டால் உருண்டு, திரண்ட தசைகளுடன் உடல்வாகு மாறும் என்கிற நம்பிக்கை. அதுவே விடலைப் பருவத்துப் பெண்களுக்கோ, குறைவாகச் சாப்பிட்டால்தான், ஒல்லியாக இருக்க முடியும் என்கிற எண்ணம்.
மாதவிலக்கின் மூலம் ஏற்படுகிற இரும்புச்சத்து இழப்பை ஈடுகட்டும் வகையில் இரும்புச்சத்துள்ள உணவுகளை அவர்கள் முறையாக எடுத்துக் கொள்வதில்லை. பருவ வயதில் சுவைகள் மாறிப் போகின்றன. அந்த வயதில் கொழுப்புள்ள உணவை நோக்கியோ அவர்களது ஆர்வம் அதிகரிக்கிறது. ஆண் பிள்ளைகளுக்கும் புரதம் நிறைந்த உணவுகளின் மீதான தேடல் அதிகரிக்கிறது. பெண் பிள்ளைகளுக்கு அவர்களது உடலில் இயற்கையாக அந்தப் பருவத்தில் அதிகம் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் காரணமாக, இனிப்பான உணவுகளின் மீது தேடல் அதிகரிக்கும். ஆக மொத்தம், பதின்ம வயதுப் பிள்ளைகள், அந்த வயதுக்கான சுதந்திரத்தை அனுபவிக்கிற நினைப்பில், அவர்களது உணவுப் பழக்கத்தைப் பற்றி யார், என்ன சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்வதில்லை.
பதின்ம வயதுப் பிள்ளைகளை எப்படி சாப்பிட வைப்பது?
1. நல்ல சத்துணவுப் பழக்கத்தை அடையாளம் காட்டுங்கள். இதை சாப்பிட்டா நல்லது, அது நல்லது என போதிக்காமல், அத்தகைய உணவுகளை நீங்கள் சாப்பிட்டால் அவர்களும் அதைப் பின்பற்றுவார்கள். உணவுப் பொருள் ஷாப்பிங்கில் உங்கள் பிள்ளைகளை ஈடுபடுத்துங்கள். உணவுப் பொருள்களை வாங்குவதிலும், தினசரி உணவைத் திட்டமிடுவதிலும் அவர்களை ஈடுபடுத்துங்கள். நல்ல உணவுக்கும், ஆரோக்கியத்துக்குமான தொடர்பை அவர்களுக்குப் புரிய வையுங்கள்.
2.. பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிற உணவுகள், அதிக சர்க்கரை, செயற்கை நிறம் மற்றும் சுவை சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள், கெமிக்கல் சேர்த்த உணவுகளை உண்பதற்குத் தடை விதியுங்கள். இத்தகைய உணவுகள் உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளின் எலும்புகளில் உள்ள கால்சியம் சத்தை அடியோடு அரித்து விடும் என்பதை அவர்களுக்கு உணர்துங்கள்.
3. பிள்ளைகளின் போக்கிலேயே உணவு பற்றிய பேச்சை கொண்டு செல்லுங்கள். உதாரணத்துக்கு அந்த வயதில் எல்லா பிள்ளைகளுக்கும் சீக்கிரம் வளர வேண்டும் என்கிற ஆவல் இருக்கும். எந்த மாதிரி உணவுகளை சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும் என்று பேசலாம். நிறைய டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு தமது நண்பர்கள் தம்மைவிட வேகமாக வளர்வதாகவும், அதற்குக் காரணம் அவர்களது உணவு அல்ல, ஜீன்ஸ் என்றும் ஒரு எண்ணம் உண்டு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, கால்சியம் நிறைந்த உணவுகளின் அவசியத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம். ஏரியேட்டட் குளிர் பானங்களில் உள்ள பாஸ்போரிக் அமிலமானது, அவர்களது எலும்புகளில் உள்ள கால்சியத்தை அழித்து, எலும்புகளின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதைப் புரிய வைக்கலாம். வளர்ச்சி என்பதை மீறி, விடலைப் பருவத்தினருக்கு அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்பதிலும் ஆர்வம் அதிகமிருக்கும். சத்தான உணவு என்பது அழகான சருமத்துடனும் தொடர்புடையது என எடுத்துச் சொல்லலாம். விளையாட்டில் ஆர்வமிருக்கும் பிள்ளைகளுக்கு சத்தான உணவு என்பது, விளையாட்டுத் திறமைக்கும், அது தொடர்பான உடற்பயிற்சி மற்றும் உடல் உறுதிக்கும்கூட அவசியமானது எனப் புரிய வைக்கலாம்.
4. விடலைப் பருவத்தில் ஆண்களுக்கு 20 சதவிகிமும், பெண்களுக்கு 33 சதவிகிதமும் இரும்புச் சத்து கூடுதலாகத் தேவை. ஆண்களுக்கு தசை வளர்ச்சிக்கும், பெண்களுக்கு மாதவிலக்கின் போதான இழப்புக்கும் இது முக்கியம் எனப் புரிய வையுங்கள்.
5. அதே மாதிரி, ஆண்களுக்கு 25 சதவிகிதமும் (தினசரி 15 கிராம்), பெண்களுக்கு அதைவிட சற்று குறைவாகவும் புரதம் தேவை என்பதை வலியுறுத்தி, அதற்கேற்ற உணவுகளைக் கொடுக்கலாம்.
6. ஆண் பிள்ளைகளுக்கு 33 சதவிகிதமும், பெண்களுக்கு 20 சதவிகிதமும் அதிகமான துத்தநாகச் சத்து தேவை.
7. விடலைப் பருவத்தில் ஆண், பெண் இருவருக்குமே அதற்கு முந்தைய வயதை விட 33 சதவிகிதம் அதிகமான கால்சியம் தேவை. (நாளொன்றுக்கு 1200 மி.கி)
8. டீன் ஏஜில் இருக்கும் போது, 20 முதல் 30 சதவிகிதம் வைட்டமின்களின் தேவையும் அதிகரிக்கிறது. அவர்களது கன்னாபின்னா உணவுப்பழக்கம் அந்தத் தேவையை பூர்த்தி செய்வதில்லை என்பதால், மருத்துவரின் ஆலோசனையுடன் வைட்டமின் சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது.
9. விடலைப் பருவத்தில் மூளையானது முழு வளர்ச்சியை அடைந்து விடுகிறது. ஆனாலும், டீன் ஏஜில் அது சில மாற்றங்களை செய்து கொண்டே இருக்கிறது. மூளை வளர்ச்சிக்கும் சத்தான உணவு அவசியம். பெரும்பாலும் இந்த வயதில் ஆண்டி-ஆக்ஸிடென்ட் (Anti-oxident), கோலீன் (Choline), ஒமிகா3 சதைப்பற்று அமிலங்கள் (Omega3 Fatty Acids), மற்றும் பல்கூட்டு மாவுச்சத்து (Complex carbohydrates) கொண்ட உணவு மூளையின் ஆரோகியத்திற்கு அவசியம். ஆனால் விடலைப்பருவதினர் பெரும்பாலும் இச்சத்துப்பொருட்கள் அடங்கிய உணவை எடுத்துக் கொள்வதில்லை. கெட்ட கொழுப்பு நிறைந்த உணவை அதிகம் உண்கிற வயது அது. ஆண்டி-ஆக்ஸிடென்ட் நிறைந்த உணவுப்பொருட்கள்: கொய்யா, பப்பாளி, கமலா போன்ற பழங்கள்; கேரட், தக்காளி, கீரை வகைகள், குடமிளகாய் வகைகள், அவரைக்காய், காலிஃப்லௌவர் போன்ற் காய்கரிகள்; பாதாம், பிஸ்தா போன்ற கொட்டைப்பருப்பு வகைகள். கோலீன் நிறைந்த உணவுப்பொருட்கள்: முட்டை மஞ்சள் கரு; பீன்ஸ், அவரைக்காய், காலிஃப்லௌவர் போன்ற் காய்கரிகள். ஒமிகா3 சதைப்பற்று அமிலங்கள் நிறைந்த உணவுப்பொருட்கள்: வஞ்சிரமீன், எரா, முட்டை மஞ்சள் கரு, வால்னட் கொட்டைப்பருப்பு, சணல்விதை. பல்கூட்டு மாவுச்சத்து நிறைந்த உணவுப்பொருட்கள்: கைக்குத்தல் அரிசி; கம்பு, கேள்வரகு, கொதுமை போன்ற முழு தானியங்கள்.
மேற்கூரிய உணவுப்பொருட்கள் மூளையைச் சிறந்து இயங்கச்சிவது மட்டுமல்லாமல் மனச்சொர்வையும் தடுப்பவை.
நண்பர்களைப் பார்த்து, அவர்களைப் போல இருக்க வேண்டும் என்கிற ஆவலின் காரணமாகவும், விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்திலும், கொழுப்பைத் தவிர்க்கிற பிள்ளைகள் அதிகம். அப்படி அவர்கள் கொழுப்பைத் தவிர்ப்பதென முடிவெடுத்ததும், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பையும் சேர்த்தே தவிர்க்கிறார்கள்.
எனவே அவர்களுக்கு மேற்கூரிய போன்ற உணவுகளை அதிகமாகவும், எண்ணெயில் பொரித்த உணவுகளைக் குறைவாகவும் எடுத்துக் கொள்ளப் பழக்க வேண்டும்.
Chapter 22.
உங்கள் மகள், அவளது பிராஜக்டை முடிக்காமல் தன் தோழியுடன் மொபைலில் பேசிக் கொண்டிருப்பதைக் கவனிக்கிறீர்கள். "பிராஜக்டை முடிக்காவிட்டால், மதிப்பெண் குறையும். அவள் விரும்பிய துறையில் சேர முடியாது. அவளுடைய எதிர்காலம் என்னாவது?" என்றெல்லாம் நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்கள் மகளோ, 'எனக்கு இன்னிக்கு சஞ்சனாவோட பேசியே ஆகணும். அவளுக்கும் எனக்குமான மிஸ் அன்டர்ஸடான்டிங்கை இன்னிக்கு சரி பண்ணணும். இல்லைனா நாளைக்கு ஸகூலுக்கு போனா மத்த ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க. எனக்கு சஞ்சனாவை விட்டா வேற பெஸ்ட் ஃப்ரெண்ட் இல்லை' என யோசித்துக் கொண்டிருப்பாள். இருவரின் பார்வையும், உலகமும் வெவ்வேறு....
'நான் என் ஃப்ரெண்ட்கூட பேசணும்மா' என உங்கள் மகள் சொல்லும் போது, 'அதெல்லாம் அப்புறம்.... முதல்ல நாளைக்கு டெஸட்டுக்கு படிக்கிற வழியைப் பாரு' என்று சொன்னால், 'உனக்கு அறிவே இல்லம்மா. என் ஃபீலிங்ஸே புரிஞ்சுக்க மட்டேங்குரியெ' என அவள் பதில் சொல்வது மட்டுமல்லாமல் அவள் ப்ராஜக்ட்டை உதசீனப்படுத்தி விடக்கூடும் . மாறாக,'ஃப்ரெண்ட்ஸ்கூட சண்டை போட்டா மனசு எவ்ளோ கஷடப்படும்னு எனக்குப் புரியும்மா. அதே நேரம் நாளைக்கு டெஸட்டுல நீ நல்ல மார்க்ஸ வாங்கணுமில்லையா? அது உன் கடமையில்லையா? நாளைக்கு டெஸ்ட்டுக்கு படிக்கவும், உன் ஃப்ரெண்ட் பிரச்னையை தீர்க்கவும் தனித்தனியா நேரம் ஒதுக்கி, அதைப் பத்தி யோசிக்கலாம், சரியா?' எனக் கேட்டுப் பார்த்தால், அம்மா தன் இடத்திலிருந்து யோசிக்கிறார் என்பதை உங்கள் மகள் உணர்வாள். நீங்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கத்தயாராவது மட்டுமல்லாமல் ப்ரஜக்டில் கவனம் செலுத்தவும் செய்வாள்.
எத்தனை சிரமமான விஷயமாக இருந்தாலும், உங்கள் டீன் ஏஜ மகன் அல்லது மகளுடன் பேச ஆரம்பிக்கும் போது, அவர்களைப் புரிந்து ஆரம்பிப்பது அவசியம். அவர்கள் சொல்கிற (அ) செய்கிற விஷயங்களில் உங்களுக்கு முழுமையான உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் அதை வெளிப்படுத்தாமல் அவர்கள் போக்கிலேயே சென்று நசூக்காக உங்கல் கருத்துக்களை எடுத்துரப்பது அவசியம்.
அடுத்தது, உங்கள் மகனோ, மகளோ சொல்கிற / செய்கிற விஷயங்கள் எதுவும் உங்களைக் குறி வைத்தவை அல்ல என்பதை உணருங்கள். உங்கள் மகள் 'உனக்கு அறிவே இல்லம்மா' என்று சொல்லும் பொழுது அவள் உங்களை முல்லாள் என்று கருதுகிராள் என்று நீங்கள் நினைப்பது தவறு. அவள் நீங்கல் சொன்ன விதத்தை தான் குறிப்பிட்டாளே தவிர உங்கள் அடிப்படையை அல்ல.
உங்கள் பிள்ளையின் செயல் அல்லது சொல்லை ரொம்பவும் பர்சனலாக, உங்களைத் தாக்குவதில்லை, அவை அவர்களின் உணர்ச்சிகளின் கொந்தளிப்பின் வெளிப்பாடு தான் என்பதை உணற்ந்து கொள்ளுங்கள். அப்படி செய்து பழகிக்கொண்டீர்களேயானால் 'டேக் இட் ஈஸி' பாலிஸிக்கு மாறிவிடுவீர்கள்.
பிள்ளைகளின் நடவடிக்கைகள் சில நேரங்களில் உங்களை மிகவும் சோகமான மனநிலைக்குத் தள்ளலாம். பிள்ளை வளர்ப்புப் பயணத்தில் இதெல்லாம் சகஜம் என உணரத் தொடங்கி விட்டாலே, அந்த சோகம் காணாமல் போய் விடும்.
உங்கள் பிள்ளைகளிடம் ஐடியா கேட்கவும், அவர்களுடன் இணைந்து செயலாற்றவும் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மகன்(ள்) மீது உங்களுக்கு அபாரமான நம்பிக்கை இருப்பதைச் சொல்லுங்கள். அவர்கள் மீதும், அவர்களது திறமைகள் மீதும் உங்களுக்குள்ள நம்பிக்கையை அடிக்கடி வெளிப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கும் உங்கள் மீதும், தங்கள் மீதும் நம்பிக்கை அதிகரிக்கும்.
சதா சர்வ காலமும், சகல விஷயங்களுக்கும் அவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருப்பதைத் தவிருங்கள். உதாரணத்துக்கு 'ஒருநாளாவது சரியான நேரத்துக்கு எழுந்திருக்கிறியா? உனக்கு என்னதான் பிரச்னை?' என எரிந்து விழுவதற்குப் பதில், 'கண்ணா.... கரெக்ட் டைமுக்கு எழுந்திருக்கிறது எப்படினு உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?' எனக் கேட்கலாம். 'தெரியலைம்மா' என அவர்கள் பதில் சொல்கிற பட்சத்தில், 'ஒண்ணும் பிரச்னையில்லை. அது ஒண்ணும் பெரிய விஷயமும் இல்லை. நான் உனக்கு சில டெக்னிக்ஸ சொல்லித் தரேன்' என அன்பாகச் சொல்லிப் பாருங்கள். சொன்னபடியே உங்கள் பிள்ளையை சீக்கிரம் எழுந்திருக்கச் செய்ய சில வழிகளை முன் வையுங்கள். அதிலிருந்து அவர்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்வு செய்யட்டும். இதன் மூலம் அவர்கள் தமது பிரச்னை என்ன என்பதையும், அதற்கான தீர்வையும் தாமே உணர்வார்கள். எல்லா விஷயத்துக்கும் நீங்கள் அவர்களுக்கு உதவ அருகில் இருக்கிறீர்கள் என்கிற நம்பிக்கையையும் இது கொடுக்கும்.
உங்களுடைய லட்சியம், உங்கள் பிள்ளை தன் மீது அக்கறை கொள்ள வேண்டுமென்பதாக இருக்க வேண்டும். அதே நேரம் தன்னுடைய விஷயங்களில் தனக்கென ஒரு சுதந்திரம் இருப்பதாகவும் அவர்களை உணரச் செய்ய வேண்டும். உங்கள் பிள்ளைகள் சொல்கிற ஒவ்வொன்றையும் கவனமாகக் கேளுங்கள். அப்படி அவர்கள் முன் வைக்கிற விருப்பங்களைப் பற்றி, பகுத்தாறாய்வுடன் யோசிக்கக் கற்றுக் கொடுங்கள். அவர்கள் எடுக்கும் முடிவுகளில் எது நல்லது, எது பிரச்னைக்குரியது, அதனால் உண்டாகக் கூடிய விளைவுகள் என்ன, அந்த முடிவு குறித்த உங்கள் பிள்ளையின் அணுகுமுறை எப்படியிருக்கும் என எல்லாவற்றையும் பேசுங்கள்.
நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் பிள்ளைகளின் பேச்சுக்குக் காது கொடுக்கிறீர்களோ, அதே அளவு அவர்கள் உங்கள் வார்த்தைகளையும் கவனிப்பார்கள். உங்கள் மகனி(ளி)ன் உடல் அசகவுக்கூறு, குரலின் ஏற்ற, இறக்கம், முகபாவனைகள் என எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனியுங்கள். ஒவ்வொன்றும் ஒரு தகவல் சொல்லும்.
உங்கள் பிள்ளைகள் சொல்வதை முழுமையாகக் கேட்டு முடித்துவிட்டீர்களா? அடுத்து அவர்கள் சொல்கிற பிரச்னை குறித்த எந்த முடிவையும், தீர்வையும் சொல்லாமல் உங்களுடைய கேள்விகளை அல்லது சந்தேகங்களை மட்டும் தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள். 'நீ சொன்னதை நான் சரியா புரிஞ்சுக்கிட்டேனாங்கிறது தெரியணும். நான் சொல்றது சரியாந்னு பாரு... 'உனக்கும் சஞ்சனாவுக்கும் சண்டை. சஞ்சனா ஸகூல்ல ரொம்பப் பிரபலம். அதனால இந்த சண்டையால மத்த பொண்ணுங்க உன்னை அவாய்ட் பண்ணுவாங்களோனு பயப்படறே.... சரியா?' இப்படி உங்கள் பிள்ளையின் போக்கிலேயே பேசலாம்.
இன்னும் ஒரு படி முன்னேறி, உங்கள் மகள் அந்த விஷயத்தில் எப்படி உணர்ச்சி வசப்படுவாளோ அதே நிலையில் நீங்கள் சிந்தித்து அவளின் வலியை நீங்களும் உணருகிறீர்கள் என்பதை அவளுக்கு தெரியப்படுத்தினால் அவளும் உங்களைப் புரிந்துக் கொண்டு நல்ல விதத்தில் உங்களிடம் உரையாடுவாள். நீங்களும் அந்த வயதைக் கடந்து வந்தவர்தானே? மிகவும் இயல்பான உங்களுடைய இந்த வெளிப்பாடு, உங்கள் மகளை, அவள் இன்னும் மிச்சம் வைத்திருக்கும் உணர்ச்சிகளையெல்லாம் கூட உங்களிடம் கொட்ட வைக்கும்.
'இந்த விஷயத்துல நீ எவ்ளோ வருத்தமா இருக்கேனு தெரியுது. நான் உன் இடத்துல இருந்தேன்னா நானும் அப்படித்தான் நினைப்பேன். நீ நினைக்கிறது சரிதான். மத்த பொண்ணுங்க எல்லாம் உன்னை அவாய்ட் பண்ணுவாங்க இல்ல...'
இப்படி சொல்லிப் பாருங்களேன். 'அம்மா நீ என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கே' என்பாள். உங்கள் பிள்ளையின் பிரச்னை குறித்த அத்தனை விஷயங்களையும் முழுமையாக உள்வாங்கும் வரை, எந்தத் தீர்வையும் முன் வைக்காதீர்கள்.
'இந்தப் பிரச்னையை சரியாக்க சரியான வழி என்னனு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கியா?' எனக் கேளுங்கள்.
உங்கள் சொந்த வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளத் தயங்காதீர்கள். அந்த அனுபவங்கள் உங்கள் பெருமை பேசுவதாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஒரு விஷயம்... உங்கள் கடந்த கால அனுபவங்களைப் பற்றி நீங்கள் சொல்லப் போகிற விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் உங்கள் பிள்ளைகள் ஆர்வமாக இருக்கிறார்களா என்பதை முதலில் உறுதிசெய்து கொள்ளுங்கள்.
நீங்கள் அவர்கள் வயதில் இருந்தபோது குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காகவோ, வீட்டுக்கு தாமதமாக வந்ததற்காகவோ உங்கள் பெற்றோரிடம் திட்டு வாங்கிய சம்பவத்தைச் சொல்லும் போது உங்கள் பிள்ளைகள் ரசிக்கலாம். அல்லது 'அதெல்லாம் அந்தக் காலம், அது வேற.... இது வேற...' என அலட்சியப்படுத்தவோ கூடும்.
உங்கள் பிள்ளைகளுடனான உரையாடலை ஆரோக்கியமாக வையுங்கள். உங்கள் உரையாடலில் நிறைய கேள்விகள் இருக்கும்படியும், அவற்றுக்கு உங்கள் பிள்ளைகள் விளக்கம் சொல்லவும், விவரிக்கவும், தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இடமிருக்குமபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
'சஞ்சனாவுக்கும், உனக்குமான பிரச்னை நாளைக்கு சரியாயிடும். விடு' எனச் சொல்வதற்குப் பதில். 'நீ ஏன் இப்பவே சஞ்சனாகிட்ட பேசக்கூடாது? உனக்கு நான் வேணா ஹெல்ப் பண்றேன்' என்று சொல்லலாம்.
உங்கள் பிள்ளையின் ஒத்துழைப்பு, பாராட்டு, நன்னடத்தை என எதுவுமே உங்களுக்குத் தேவையில்லை எனப் புரிந்து கொள்ளுங்கள். அப்படி சில விஷயங்கள் உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் என நினைத்து, எதிர்பார்க்க ஆரம்பித்தால், உங்கள் பிள்ளைகள் அப்படி நடந்து கொள்ளாத பட்சத்தில் உங்களுடைய மனநிலை வேறு மாதிரி மாறும். எதிர்பார்த்தபடி நடக்காத போது, அதைக் கிடைக்கச் செய்ய அவர்களைக் கட்டுப்படுத்தவும், நிர்ப்பந்திக்கவும் தூண்டும். அந்த அணுகுமுறை சரியானதல்ல.
உங்கள் பிள்ளையின் நடத்தை குறித்த பிரச்னையின் போது நீங்கள் எப்படி நடந்து கொள்ளப் போகிறீர்கள் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அந்த விஷயத்தில் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பற்றி யோசிக்காமல், 'நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?' என்று உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள். ........................
உங்கள் பிள்ளைகள் சரியாக நடந்து கொள்கிற வரை அவர்களுடன் பேசுவதைத் தவிருங்கள். ஒரு உண்மை தெரியுமா? உங்கள் பிள்ளையை எப்படி சரி செய்வது என முயற்சிப்பதை நிறுத்தி விட்டாலே உங்களுக்கு நிறைய நல்ல வழிகள் தோன்றும். உங்கள் பிள்ளைக்கும் தன் எதிர்ப்பைக் காட்ட ஆளின்றிப்போகும். உங்கள் பிள்ளையைக் கட்டுப்படுத்துவது, அவன் (ள்) செய்கிற விஷயங்களுக்கு ரியாக்ட் செய்வது போன்றவற்றை நிறுத்தினால், உங்கள் மகன் அல்லது மகள் உங்களிடம் மோதுவதைத் தவிர்த்து தனக்குத்தானே தான் போராட வேண்டும்.
இன்னொரு முக்கியமான விஷயம்.... உங்களுக்கும், உங்கள் பிள்ளைக்குமான பிரச்னை சுமூகமாகும் வரை எதையும் செய்யாதீர்கள். நீங்கள் மனச்சலனத்துடன் இருக்கும் போது, உங்கள் பிள்ளைகளின் பேச்சுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை. எதையும் சொல்லாதீர்கள். எதையும் செய்யாதீர்கள். உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கியபிறகு அவர்களுடன் அமைதியாக உட்கார்ந்து பேசலாம். எந்த ஒரு பிரச்னைக்கும் அது அனல்பறக்க விவாதிக்கப்படும் போது, அதற்கான தீர்வு காண முயல வேண்டாம். எனவே நீங்களும் சரி, உங்கள் பிள்ளைகளும் சரி மோசமான மனநிலையில் இருக்கும் போது பிரச்னைகளைப் பற்றி விவாதிக்காமல், நிலைமை சரியான பிறகு பேசுவதே சரியான அணுகுமுறை.
உங்கள் மகன் அல்லது மகளிடம் ஒரு விஷயத்தைப் பற்றிய உரையாடலைத் தொடங்குகிறீர்கள்... அவர்களுக்கு அப்போது அதைப் பற்றிப் பேச விருப்பமின்றி, எரிந்து விழுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். சட்டென உணர்ச்சிவசப்படாமல், அந்த உரையாடல் சண்டையில் போய் முடியாமலிருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.....................
கடைசியாக ஒரு விஷயம். எந்த விஷயத்துக்கும், எந்தப் பிரச்னைக்கும் விளக்கமும், தீர்வும், ஆறுதலும் தேடி உங்களிடம் வரலாம் என்கிற நம்பிக்கையை உங்கள் பிள்ளைகளுக்குக் கொடுங்கள். 'நீ செய்யற எல்லாத்தையும் நான் ஏத்துக்குவேன்னு நினைக்காதே. நீ எப்படியிருந்தாலும் உன் மேல எனக்கு அளவுகடந்த அன்பு உண்டு' என்பதை அழுத்தமாகச் சொல்லுங்கள்.
தவிர............
உங்கள் பிள்ளை உங்களிடம் பேசும் போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் எனக் கவனியுங்கள். பேப்பர் படித்துக் கொண்டோ, சமைத்துக் கொண்டோ, பாத்திரம் கழுவிக் கொண்டோ அவர்களுக்குக் காது கொடுக்காமல், கண்ணோடு கண் பார்த்துப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். 'நீ சொல்றதை நான் முழுமையா கேட்கறேன்' என்கிற நம்பிக்கையை கண்கள் மட்டும்தான் ஏற்படுத்தும்.
உங்கள் பிள்ளைகளின் பேச்சில் குறுக்கிடாதீர்கள். அவர்களது கருத்தில் உங்களுக்கு உடன்பாடில்லாவிட்டாலும், முழுமையாகப் பேச அனுமதியுங்கள். பேச்சை முழுவதும் கேட்ட பிறகுதான் அதை சரிப்படுத்தும் முயற்சியை ஆரம்பிக்க வேண்டும்.
உங்கள் பிள்ளைகளுடன் உரையாடும் போதான உங்கள் குரல் மிகவும் முக்கியம். எரிந்து விழுகிற தொனியிலோ, கோபமான குரலிலோ பேசுவதைத் தவிருங்கள். நாம் பெரும்பாலான நேரங்களில் நமக்கிருக்கும் வேறு பிரச்னைகளின் தாக்கத்தினால் பிள்ளைகளிடம் அப்படித் தான் பேசுகிறோம்.
உங்கள் பிள்ளைகள் எதையோ உங்களிடம் சொல்ல நினைப்பார்கள். ஆனால் அதை எப்படி, எங்கிருந்து ஆரம்பிப்பது என்கிற தயக்கமிருக்கும். அப்படி அவர்கள் மனதை மோப்பம் பிடிக்க உங்களுக்கு சில க்ளூ....
தனது பிரச்னையை தன் நண்பரின் பிரச்னை மாதிரிப் பேசுவார்கள். உதாரணத்துக்கு.... 'அம்மா அந்தப் பையன், விடியோ கடையிலேருந்து காசே கொடுக்காம சி டி யை எடுத்துட்டு வந்திருக்கான். கடைக்காரங்களுக்குத் தெரிஞ்சிட்டா அவனைப் பிடிச்சிடுவாங்களாமா? பெரிய பிரச்னை ஆயிடுமா?'
உங்களுடைய டீன் ஏஜ அனுபவங்களைப் பற்றி ஆர்வமாக விசாரிப்பார்கள். 'அம்மா உனக்கு முதல் முதல்ல யார்மேல காதல் வந்துச்சு? எப்போ?'
தனக்கிருக்கும் பிரச்னையை வேறு வழியில் உங்களுக்கு வெளிப்படுத்தலாம். உதாரணத்துக்கு தனது அறையில், தனது படுக்கையில் ஒரு புத்தகத்தைத் திறந்த நிலையில் வைத்திருந்தாள் ஒரு டீன் ஏஜ் பெண். திறந்திருந்த அந்தப் பக்கங்களில் என்ன எழுதியிருந்தது தெரியுமா? 'டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் மன அழுத்தம் வரும்' என்று.
அதாவது தான் மன அழுத்தத்தில் இருப்பதையும், தனக்கு உதவி தேவைப்படுவதையும் மறைமுகமாக உணர்த்தியிருக்கிறாள் அந்தப் பெண்.
உங்கள் மகள் அல்லது மகனிடம் சில விஷயங்களை நேருக்கு நேர் பேசத் தயக்கமாக இருந்தால் கடிதம் அல்லது இ மெயில் மூலம் அவர்களுக்குச் சொல்லுங்கள். எழுத்தின் மூலம் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது அதன் பிரதிபலிப்பே வேறு மாதிரி இருக்கும்.
அதற்காக எதற்கெடுத்தாலும், எல்லாவற்றுக்கும் கடிதம் எழுதுவதையும் தவிருங்கள். நேரில் விளக்கமாகப் பேச முடியாத விஷயங்களை எழுத்தில் முழுமையாகப் பகிர முடியும் என்கிற சந்தர்ப்பங்களுக்கு மட்டும் அது சரி. மற்றபடி எல்லா நேரங்களுக்கும் அது தேவையில்லை. கடிதம் எழுதுவதில் இன்னொரு நன்மையும் உண்டு. நேருக்கு நேரான உரையாடலின்போது எதிர் தரப்பிலிருந்து எழக்கூடிய எதிர்ப்பு அல்லது கோபத்துக்கு இங்கே வழியில்லை. அன்பைச் சொல்லும் ஆழமான வழி இது என்பதிலும் சந்தேகமே இல்லை.
உங்கள் பிள்ளை எப்பொழுதும் உங்களுடன் உரையாடத் தயார் தான். ஆனால் அதை எப்படி சரிவரச்செய்வது என்பதை அறிய மாட்டாள்(ன்). இதற்கு காரணம் அவர்களுடைய பருவம். இதை நீங்கள் தீர உணர்ந்து கோண்டாலே அவர்கள் சொல்லும் செயலும் உங்களுக்கு எளிதில் புலப்படும்.
Chapter 23
'யாரைக் கேட்டு என் டிரெஸ்சை எடுத்துப் போட்டே.....'
'என் ரூமை விட்டு வெளியே போ....'
'எவ்ளோ நேரமா நீயே கம்ப்யூட்டர்ல விளையாடிட்டிருப்பே....'
ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் இந்த மாதிரி உரையாடல்களும், சண்டைகளும் சகஜம். டீன் ஏஜில் இருந்தாலும், அவர்கள் குழந்தைகளைப் போலவே அடித்துக் கொள்வார்கள். சண்டை போடுவதிலும், சண்டையின் போது அவர்கள் உபயோகிக்கிற மொழியிலும் மட்டும் அவர்கள் வயதுக்கேற்ற வளர்ச்சி தெரியும்.
டீன் ஏஜ் சண்டை என்பது பெற்றோருக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுக்கும் ஒன்று. ஆனாலும் அதற்கொரு உபயோகமான காரணம் இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு தேவை இல்லமல் அவர்கள் அச்சண்டையில் தலையிடக்கூடாது. ஏன் என்றால் உடன் பிறந்தவர்களுடனான அவர்களது சச்சரவு அவஅர்களுக்கு வாழ்க்கை பிரச்சனைகளை மன முதிர்ச்சியுடன் அணுகி சம்மாளிக்க ஒரு வாழ்க்கைப்பாடமாக அமையு.
டீன் ஏஜ் சண்டையானது சரியாகக் கையாளப்பட்டால், அது அவர்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்கும். வாழும் கலை நுட்பங்களை, உதாரணத்துக்கு பிரச்னைகளை எப்படித் தீர்ப்பது, அடுத்தவர் இடத்திலிருந்து பிரச்னைகளை எப்படிப் பார்ப்பது, பலதரப்பட்ட அபிப்ராயங்களையும் எப்படி பரிசீலிப்பது, எப்படி விட்டுக் கொடுப்பது, எப்படி ஒரு ஒப்பந்தத்துக்கு வருவது... போன்ற பல விஷயங்களை அவர்களுக்குக் கற்றுத் தரும். டீன் ஏஜ் சண்டையானது, உங்கள் பிள்ளைகளுக்குப் பிற்காலத்தில் நல்ல நண்பர்களை, நல்ல துணையை, நல்ல சக ஊழியர்களை அடையாளம் கண்டு கொள்ள உதவியாக இருக்கும்.
விடலைப் பருவத்தின் தொடக்கத்தில் இந்த டீன் ஏஜ் சண்டையானது உச்சத்துக்கு வரும். அதிலும் குறிப்பாக இருவரில் இளையவர் டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் போது.... டீன் ஏஜில் அடியெடுத்து வைத்துள்ள இளையவர், தன்னைவிட வயதில் மூத்த டீன் ஏஜ் அண்ணன் அல்லது அக்காவை ஆதிக்கம் செலுத்துகிற இன்னொரு நபராகப் பார்க்கும் போது, சண்டை வலுக்கும். பெற்றோர் மற்றும் வயதில் மூத்த டீன் ஏஜ் உடன்பிறப்பு என இருவரிடமிருந்தும் விடுதலை பெறும் எண்ணத்தில் இள வயது டீன் ஏஜ் ஆண் அல்லது பெண்ணுக்கு வேகம் அதிகரிக்கும். இது போன்ற மோதல்கள் தானும் ஒரு தனி நபர் என்பதை உருதி செய்யும் அடிப்படையில் உருவாகின்றன.
பொதுவாக டீன் ஏஜில் தன்னைப் போலவே விருப்பு வெறுப்பு கொண்டவர்களையே நட்பாக்கிக் கொள்வார்கள் பலரும். ஆனால் அதே விருப்பு, வெறுப்பு கொண்ட உடன் பிறப்புகளுடன் ஒத்துப் போகாது. இருவருக்கும் பொதுவான விஷயங்களுக்குக் காரணமாக ஜீன் என்கிற ஒன்று இருந்தாலுமே, 'ரெண்டு பேருக்கும் எந்த விஷயத்துலயும் ஒத்துப் போகாது' என்கிற நினைப்பே மேலோங்கியிருக்கும்.
இருவரது நிறம், இருவருக்குமான சமத்துவம், அந்தரங்க இடைவெளி, நட்பு.... இவையெல்லாம் டீன் ஏஜ் உடன்பிறப்புகளுக்கு இடையில் பிரச்னைகள் வருவதற்கான முக்கியமான காரணங்கள்.
டீன் ஏஜ் பிள்ளைகளின் சண்டையை விலக்குவதும், சமாதானப்படுத்துவம் பெற்றோருக்கு மகா இம்சையான வேலை. ஆனால் அதுவும் கடந்து போகும். அவர்களது சண்டையெல்லாம் அந்த நேரத்துக்குத் தான். தேவைப்படுகிற நேரங்களில் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள். கீரி-பாம்பு போன்று சண்டையிடும் இருவரும் திடீரென்று கொஞ்சிக்கோண்டு இருப்பார்கள். இதனால் நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். மேலும் அவர்கள் சண்டையிடும் பொழுது நீங்கள் சமரசம் செய்ய முடர்ச்சி செய்தால் இருவரும் ஒன்று சேர்ந்து உங்களை தாக்கவும் கூடும்.
டீன் ஏஜ் பிள்ளைகளின் சண்டைகளை எப்படி சமாளிப்பது?
& அவர்கள் சண்டை போடும் போது, உடனடியாக இருவருக்கும் சமரசம் பேசி, இருவரின் பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்காதீர்கள். அந்த நேரத்தில் அப்படியொரு நடவடிக்கை உங்களுடைய மன அழுத்தத்தையும், கோபத்தையும் விரைவாக விரட்டும் என்றாலும் அது நிரந்தரத் தீர்வல்ல. இருவரிடமும் அவரவர் தரப்பு வாதங்களை முன் வைக்கச் சொல்லிக் கேளுங்கள். முழுவதும் கேட்ட பிறகு தீர்வை நோக்கிய ஒரு வழிக்கு அவர்களை வழிநடத்துங்கள். பிரச்னைகளைத் தீர்க்கும் வழிகளை யோசித்து அவர்கலாகவே ஒரு தீர்வு காணும்படி உதவுங்கள்.
அவர்கள் எதற்காக அடித்துக் கொள்கிறார்கள் என்பதைத் தெளிவுப்படுத்துங்கள். அவர்களது தேவை என்ன என்பதைக் கேளுங்கள். பிறகு இருவரையும் சேர்த்து ஒரு முடிவுக்கு வரத் தூண்டுங்கள்.
கூடியவரையில் அவர்களது சண்டைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள ஊக்கப்படுத்துங்கள். உதாரணத்துக்கு இருவரும் கம்ப்யூட்டர் உபயோகிப்பது குறித்து அடித்துக் கொள்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். இருவருமே அதை உபயோகிக்கத் தடை போடுங்கள். இருவரும் சேர்ந்து இசைவான ஒரு முடிவுக்கு வந்தால்தான் தருவேன் எனச் சொல்லுங்கள்.
அவர்களது சண்டையில் எப்போதும் உங்களுக்கு ஒரு கண் இருக்கட்டும். அப்போதுதான் ஒருவர் இன்னொருவரை டாமினேட் செய்வதைத் தடுக்க முடியும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டியதன் அவசியத்தையும், அதன் மூலம் இருவருக்குமே ஏதோ ஒரு பலன் இருக்கும் என்பதையும் சொல்லுங்கள். விட்டுக் கொடுத்துப் போகத் தயாராக இல்லாத பட்சத்தில், அதன் விளைவை இருவருக்கும் உணர்த்துங்கள்.
இருவரின் சண்டைக்கு இருவரும்தான் பொறுப்பு. யார் முதலில் ஆரம்பித்தார்கள் என ஆராய்வதைத் தவிர்த்து, அவர்களது சண்டைக்கான காரணத்தைக் கவனியுங்கள்.
இருவரில் யாருக்கும் சப்போர்ட் செய்து பேசாதீர்கள். அப்படிப் பேசினால் தன் தரப்பு நியாயம் அலட்சியப்படுத்தப்படுவதாக இன்னொரு டீன் ஏஜ் பிள்ளை நினைக்கலாம். இருவரையும் தனித்தனியே பிரச்னையை விவரிக்கச் சொல்லி, பிறகு இருவர் தரப்பிலிருந்தும் தீர்வுகளைக் கேளுங்கள்.
வாய்ச்சண்டை முற்றி, இருவரும் வன்முறையில் இறங்கினால், அது அவர்களது நீண்டகால உறவை நிச்சயம் பாதிக்கும். எனவே அந்தக் கட்டத்தில் நீங்கள் உள்ளே புகுந்து அதை நிறுத்த வேண்டும்.
எதிர்காலத்தில் இத்தகைய சண்டைகளைக் குறைக்க....
டீன் ஏஜ் உடன்பிறப்புகளுக்கு இடையிலான சண்டையைத் தவிர்க்க, பெற்றோராகிய உங்கள் தரப்பிலிருந்து கொஞ்சம் முனைப்பு தேவை.
& இருவருக்கும் தனித்தனி இடங்களை ஒதுக்குங்கள். அது உங்கள் வசதிக்கேற்ப தனித்தனி அறையாகவோ, ஒரே அறையில் தனித்தனி பிரிவுகளாகவோ இருக்கலாம். அந்த அறைக்குள் இன்னொருவர் அனுமதியின்றி யாரும் நுழையக் கூடாது. இருவருக்கும் தனித்தனியே பொருள்களைப் பிரித்துக் கொடுங்கள். அதை அவர்கள் அனுமதியின்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. அவரவர் வயதுக்கேற்ப்ப சலுகைகள் கொடுக்கப்படும் என்பதை உருதி பதடுத்துங்கள். ஆதே சமயத்தில் ஒரு வயதில் ஒரு பிள்ளைக்கு கொடுத்த சலுகைகள் அதே வயதில் அடுத்த பிள்ளைக்கும் அவசியமாக வழங்கத்தவாராதீர்கள்
குழந்தைகளின் பிரச்னைகளை பட்டிமன்றத் தலைப்புகளுக்கு உள்ளாக்காதீர்கள். இருவருக்கும் பொதுவான விருப்பங்களை, குடும்பச் செயல்களை, உதாரணத்துக்கு உடற்பயிற்சி செய்வது, ஷாப்பிங், படம் பார்ப்பது போன்றவற்றை ஊக்கப்படுத்துங்கள். இருவரும் சேர்ந்து செய்யக் கூடிய ஒரு செயலைக் கொடுத்து ஊக்கப்படுத்தலாம். உதாரணத்துக்கு உங்கள் குடும்பத்துக்கான ஒரு சிறப்பு உணவை சமைக்கச் சொல்லலாம்.
இருவரையும் ஒருவருடன் ஒருவர் ஒப்பிடாதீர்கள். அதற்குப் பதிலாக ஒவ்வொரு பிள்ளையின் தனிப்பட்ட திறமைகளைத் தெரிந்து கொண்டு தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்துங்கள். 'உன் அண்ணனை மாதிரி இருக்கக் கத்துக்கோ' என்றோ, 'உன் அக்கா இப்படியெல்லாம் தப்பு பண்ணவே மாட்டா' என்றோ ஒப்பிட்டு மட்டம் தட்டாதீர்கள். அது அவர்கள் இருவருக்குள்ளும் விரோத உணர்வை அதிகரிக்கும்.
எல்லாக் குழந்தைகளிடமும் ஒரே மாதிரியான அன்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவருடனும் நீங்கள் செலவிடுகிற நேரம் உபயோகமாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கட்டும்.
குடும்ப விதிகளை வலியுறுத்துங்கள். உதாரணத்துக்கு வன்முறை நடவடிக்கைகளை அனுமதிக்காதீர்கள். என்ன மாதிரியான மொழி, எப்படிப்பட்ட வார்த்தைகளுக்கு குடும்பத்தில் அனுமதி என்பதையும் அழுத்தமாகப் பதிய வையுங்கள். மிரட்டல், உருட்டல்களை அனுமதிக்காதீர்கள்.
தான் சொல்ல நினைப்பதை மனம் திறந்து சொல்ல உங்கள் பிள்ளைகளை ஊக்கப்படுத்துங்கள். அடிக்கடி குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து பேசுகிற பழக்கத்தை உண்டாக்குங்கள். அதில் அவரவர் பிரச்னைகளைப் பகிர்ந்து கொள்ளவும், தீர்வுகளை யோசிக்கவும் நேரம் ஒதுக்குங்கள்.
உங்கள் பிள்ளைகளுடன் தொடர்பிலேயே இருங்கள். உங்களிடம் எதைப் பற்றியும், எந்த நேரமும் பேசலாம் என்கிற நம்பிக்கையையும், அதற்கான ஆலோசனை உங்களிடம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை கொடுங்கள்.
Chapter 24
பியர் ப்ரெஷர்
'என் ஃப்ரெண்ட் மனிஷா புதுசா ஐபேடு வாங்கியிருக்கா. எனக்கும் அதே மாதிரி வேணும்...'
'மிதுனா அவளோட பர்த் டேவை ஸடார் ஹோட்டல்ல செலிப்ரேட் பண்ணப் போறாளாம். என் பர்த்டேவையும் அப்படித்தான் பண்ணணும்...'
இப்படி உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகள் தினம் தினம் ஒரு கோரிக்கையுடனோ, விருப்பப்பட்டியலுடனோ உங்களை அணுகுவார்கள். உண்மையில் உங்கள் மகனுக்கோ, மகளுக்கோ தனிப்பட்ட முறையில் அவர்கள் முன் வைக்கிற விஷயங்களில் ஆர்வம் இருக்காது. ஆனாலும் அவர்களது நண்பர்கள், சக மாணவர்கள் என அவர்களது வயதிலிருக்கிற மற்ற டீன் ஏஜ பிள்ளைகள் செய்வதைப் பார்த்து அவர்கள் மத்தியில் தாமும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமே என்கிற நினைப்பிலேயே அப்படிச் செய்வார்கள். அதைத்தான் ஒப்பானோர் வற்புறுத்தல் என்கிறோம். ஆங்கிலத்தில் பியர் ப்ரெஷர்.
இந்த ஒப்பானோர் வற்புறுத்தல் பாசிட்டிவாகவும் அமையலாம். உதாரணத்துக்கு உங்கள் மகளோ, மகனோ தன் நண்பரைப் பார்த்து ஏதோ ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டலாம்.
அதே நேரம் இது நெகட்டிவாகவும் அமையலாம். தன் தோழியோ, நண்பரோ செய்வதைப் பார்த்து தனக்குப் பழக்கமில்லாத தவறான பழக்கவழக்கங்களுக்கு அவர்களும் அறிமுகமாகலாம். உதாரணத்துக்கு சிகரெட், போதை மருந்துப் பழக்கங்கள், அதீதமாக செலவு செய்தல்.........
தன் நண்பன் அல்லது தோழியைப் போன்று ஒரே மாதிரி உடை அணிவது, நகை போடுவது, ஹேர் ஸடைல் வைத்துக் கொள்வது, ஒரே மாதிரியான இசையை ரசிப்பது, டி.வி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என்பதில் தொடங்கி, அவர்கள் உபயோகிக்கிற வார்த்தைகளுக்குப் பழகுவது, நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொள்வது, ரிஸ்க் எடுப்பது, விதிகளை மீறுவது, நன்றாகப் படிப்பது அல்லது படிப்பில் அலட்சியமாக இருப்பது, செக்ஸ நடவடிக்கைகளில் ஈடுபடுவது, குடிப்பது போன்றவை வரை எல்லா விஷயங்களிலும் இது பிரதிபலிக்கலாம்.
தன்னம்பிக்கையும், சுய மதிப்பீடும் குறைவாக இருக்கும் பிள்ளைகளும், நண்பர்கள் அதிகமில்லாதவர்களும், சிறப்புத் தேவைகள் இருக்கிறவர்களும் இத்தகைய ஒப்பானோர் வற்புறுத்தலுக்கு எளிதில் ஆளாவார்கள். தனித்து விடப்பட்டதாக உணர்கிற அவர்களுக்கு, தன் நண்பர்கள் செய்கிற விஷயங்களில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்வதன் மூலமே அவர்களுக்கு நெருக்கமாக இருக்க முடியும் என நம்புவார்கள்.
சில பிள்ளைகள் தான் யார் என்பதை உணர்ந்திருப்பார்கள். அதே சமயம் தனது நண்பர்களுடன் இணைந்திருக்கிற, இரண்டையும் பேலன்ஸ செய்கிற வித்தையையும் தெரிந்து வைத்திருப்பார்கள்.
சில பிள்ளைகளுக்கு சுயமதிப்பீடு மிக அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தன்னை வற்புறுத்தும் நட்பு அழுத்தங்களிலிருந்து விலகி இருக்கத் தெரிந்திருக்கும். அத்தகைய பிள்ளைகள் நண்பர்கள் செய்கிறார்களே என சில விஷயங்களைத் தாமும் செய்ய நினைக்க மாட்டார்கள். சுய மதிப்பீடு என்பது நல்ல உறவுகளை வளர்த்துக் கொள்ள வழிகாட்டும். அதே நேரம் நல்ல உறவுகள் இருப்பவர்களுக்கு சுயமதிப்பீடு தானாக வரும்.
பெற்றோராக, உங்கள் பிள்ளைகள் தம் நண்பர்களைப் பார்த்து ரொம்பவும் மாறிவிட்டதாகவும், தனது மதிப்பீடுகளை இழந்து விட்டதாகவும் நீங்கள் நினைக்கலாம். நண்பர்கள் வற்புறுத்தும்போது, சில விஷயங்களுக்கு 'நோ' சொல்லத் தெரியாமல் அதற்குப் பழகிவிடுவார்களோ என்கிற பயமும் உங்களுக்கு இருக்கலாம்.
ஒரு விஷயம்.... தன் தோழி ரசிக்கிற அதே பாடலை தானும் கேட்பதாலேயோ, தன் நண்பனுக்குப் பிடித்த அதே ஹேர் ஸடைலை தானும் வைத்துக் கொள்வதாலேயோ அவர்கள் செய்கிற சமூக விரோதச் செயல்களுக்கும் உங்கள் பிள்ளைகள் பழகுவார்கள் என நினைக்காதீர்கள். உங்கள் பிள்ளைகளின் வளர்ப்பில் உங்களுடைய தாக்கமும் பிரதானமாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். தன்னைப் பற்றிய சுயமதிப்பீடு அறிந்திருக்கிற, தன் குடும்பத்தின் மதிப்பீடுகளைப் புரிந்திருக்கிற பிள்ளைகளுக்கு, தவறான வற்புறுத்தல்கள் தம்மை நோக்கி வைக்கப்படும் போது, அவற்றுக்கு எங்கே, எப்படி எல்லைக் கோடு வரைய வேண்டும் என்பதையும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி உதவலாம்?
- உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்குமான உரையாடலை எப்போதும் வரவேற்கிற நிலையில் இருங்கள்.
- 'முடியாது' என சொல்லக் கற்றுக் கொடுங்கள். உங்கள் பிள்ளைக்கு ஒரு விஷயத்தைச் செய்வதில் விருப்பமில்லாமல் இருக்கும். ஆனாலும் அதை வெளிப்படையாக நண்பரிடம் சொல்வதில் தயக்கம் இருக்கலாம். அந்த மாதிரி நேரங்களில் அடுத்தவரைக் காயப்படுத்தாத வகையில் 'நோ' சொல்லும் வழிகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
உதாரணத்துக்கு உங்கள் டீன் ஏஜ பிள்ளையை, அவனது நண்பர்கள் சிகரெட் பழக்கத்துக்குள் இழுக்க முயற்சி செய்யலாம். 'முடியாது' என கண்டிப்பாக சொல்வதை தர்மசங்கடமாக உணரும் உங்கள் மகன், அதையே 'இல்லை.... ஸமோக் பண்ணினா என்னோட வீசிங் பிரச்னை இன்னும் அதிகமாயிடும்' என்றோ, 'ஸாரி... இந்த புகை எனக்கு அலர்ஜி' என்றோ சொல்லித் தவிர்க்கலாம்.
- உங்கள் டீன் ஏஜ பிள்ளைகளுக்கு வேறு வேறு ஏரியாக்களில் நட்பு வட்டத்தை வளர்த்துக் கொள்ள ஊக்கப்படுத்துங்கள். உதாரணத்துக்கு ஸபோர்ட்ஸ, டியூஷன், அக்கம்பக்கத்து வீட்டுப் பிள்ளைகள்.... இப்படி. ஒரு இடத்தில் அவர்களது நட்பில் பிரச்னை வந்தாலும், அதிலிருந்து வெளியே வர வேறு நண்பர்களின் சேர்க்கை உதவியாக இருக்கும்.
- உங்கள் டீன் ஏஜ பிள்ளைகளுக்கு முடிந்தளவுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து விடுங்கள். சுயமதிப்பீட்டைக் கற்றுக் கொடுங்கள். இது அவர்களுக்கு எந்த விஷயத்திலும் சுயமாக முடிவெடுக்கவும், தன்னை வற்புறுத்தும் நட்பு வட்டத்தைத் தவிர்க்கவும் கற்றுத் தரும்.
- உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் உங்கள் வீட்டுக்கு வருவதையும், உங்கள் முன்னிலையில் நட்பு வளர்ப்பதையும் ஊக்கப்படுத்துங்கள். அப்போது அந்த நட்பு வட்டத்தில் உங்கள் பிள்ளையை தம் பக்கம் இழுக்கும்படியான வற்புறுத்தல் இருந்தால் உங்களால் உடனடியாகக் கண்டுபிடித்துத் தடுக்க முடியும்.
- வற்புறுத்தும் நட்பின் மூலம் சந்திக்கிற நெகட்டிவ் உணர்வுகளைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறபடி, உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்குமான உரையாடலை சுமூகமாக, வெளிப்படையாக வைத்திருங்கள்.
- உங்கள் பிள்ளைகளின் நட்பு வட்டம் சரியல்ல என்றும், அவர்களது தாக்கம் உங்கள் பிள்ளையை பாதிக்கிறது என்றும் உங்களுக்குத் தெரிய வரலாம். அதை நீங்கள் நேரடியாக உங்கள் பிள்ளைகளிடம் சொன்னால், உங்களுக்குத் தெரியாமல் மறைமுகமாக அந்த நட்பைத் தொடரவே செய்வார்கள். குறிப்பிட்ட யாருடனாவது நட்பே கூடாது என நீங்கள் சொன்னால், வேண்டுமென்றே அந்த நபருடன் அதிகம் நெருங்கவே உங்கள் பிள்ளைகள் விரும்புவார்கள். உங்கள் பிள்ளைகளின் நண்பர்களில் ஒருசிலரைக் குறிப்பிட்டுப் பேசுவதற்குப் பதிலாக, அவர்களிடம் உங்களுக்குப் பிடிக்காத நடத்தையை மட்டும் பேசுங்கள். அந்த நண்பர்களைப் பற்றிய உங்கள் கருத்துக்களை முன் வைப்பதற்குப் பதிலாக, அவர்களது நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை மட்டும் விளக்குங்கள்.
- சில விஷயங்களில் உங்கள் பிள்ளைகளுடன் நீங்கள் அனுசரித்துப் போவதுதான் நல்லது. உதாரணத்துக்கு உங்கள் மகள் தன் தோழியைப் போல டிரெஸ் செய்ய விரும்பலாம். உங்கள் மகன் உங்களுக்குப் பிடிக்காத ஒரு ஹேர் கட்டை செய்து கொள்ள ஆசைப்படலாம். உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் பிடிக்காத காரணத்தினாலேயே இதையெல்லாம் கூடாது எனச் சொல்வதற்குப் பதில், அவர்கள் தங்களது நட்பு வட்டத்தோடு இணைந்திருக்கச் செய்கிற இது போன்ற ஆபத்தில்லாத சின்னச் சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்தாமல் விட்டுக்கொடுங்கள்.
- தனக்குப் பிடித்த நண்பர்கள் குழுவுடன், அவர்களுக்குப் பிடித்த மாதிரி இணைந்திருப்பது டீன் ஏஜ பிள்ளைகளுக்கு ஒருவித தன்னம்பிக்கையையும், மதிப்பையும் தரலாம். அந்த நட்பின் மூலம் அவர்கள் அவசியமான சமுதாயத் திறமைகளைக் கற்றுக் கொள்வார்கள். மற்றவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கற்றுக் கொள்வார்கள்.
- உங்கள் மகன் அல்லது மகளின்பழக்க வழக்கங்களில், நடை-உடை-பாவனைகளில், செலவு வைப்பதில் அதீத மாற்றங்களை உணர்கிறீர்கள் என்றால்.... அதற்கெல்லாம் காரணம் அவர்களது நட்பு என நம்புகிறீர்கள் என்றால்...... அவர்களுடன் பொறுமையாகப் பேசிப் பாருங்கள். டீன் ஏஜில் சில பழக்க வழக்கங்கள் அடிக்கடி மாறுவது சகஜம்தான். ஆனால் அதெல்லாம் உங்கள் குடும்பத்தின் பழக்க வழக்க கோட்படுகளுக்க பாதிப்பு ஏரற்படுத்தும் வகையில் அமைகின்றனவென்றால் உலனடியாக செயல்பட தயங்காதீர்கள்.
தன்னம்பிக்கை குறைவு, அழுகை, அதீத மன அழுத்தம், கோபம், சமுதாயத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, தூக்கத்திலும், உணவுப்பழக்கத்திலும் திடீர் மாற்றம், பள்ளிக்குச் செல்ல விரும்பாதது, அதற்கு முன் ஆர்வமாக இருந்த விஷயங்களில் திடீரென ஆர்வமிழப்பது..... போன்ற அறிகுறிகளைப் பார்த்தீர்களானால், மனநல ஆலோசகரின் உதவியை நாடுவது பாதுகாப்பானது.
CHapter 25
ஒற்றைப் தாய் தந்தையர்
நமது சமூகக் கலாசாரஙகளில் மிகவும் சிரமமானதும், சவாலானதுமான விஷயம் ஒற்றைப் தாய் அல்லது தந்தையாக இருப்பது. அம்மா, அப்பா என இரண்டு பேரும் இருந்தாலுமே டீன் ஏஜ் பிள்ளைகளைக் கையாள்கிற பருவத்தைப் போராட்டமாக எதிர்கொள்ளும் போது, இருவரில் ஒருவர் மட்டுமே அந்தப் போராட்டத்தை எதிர்கொள்ளும் போது சுமைகளும், பிரச்னைகளும் பன்மடங்கு அதிகரிக்கும்.
ஒற்றைப் தாய் அல்லது தந்தையாக இருக்கிற எந்த ஆணும், பெண்ணும் அப்படியொரு நிலையை வேண்டுமென்றே திட்டமிட்டு வரவழைத்துக் கொள்வதில்லை. இருவராகச் சேர்ந்து வாழத் தொடங்குகிறவர்களுக்கு இருவரில் ஒருவரது இறப்பு, விவாகரத்து, கைவிடப்படுவது என ஏதேனும் ஒரு காரணத்தால் பிரிவை சந்திக்க நேர்கிறது. அம்மா, அப்பா ஆகிய இரண்டு பாத்திங்களையும் ஒருவரே தரித்து செயல்பட வேண்டிய நிர்பந்தத்தில், பிள்ளைகளின் எல்லா தேவைகளையும் ஒருவரே கவனிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு அவர்களுக்கு உண்டாகிறது. டீன் ஏஜ் பிள்ளைகளை வளர்ப்பது என்கிற ஏற்கனவே சிக்கலான ஒரு காரியத்தை, ஒற்றைத் தாய் அல்லது தந்தையாக இருப்பவர்கள், இன்னும் சிக்கலுடன் எந்தவித உதவிகளும் இல்லாமலே அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது.
அம்மா அல்லது அப்பா என ஒருவரின் வளர்ப்பில் வளரும் பிள்ளைகளுக்கு வாழ்வாதாரத்தைப் பற்றி, எங்கே, எப்படி வாழ்வது என்பது பற்றி, யார் தமக்குப் பாதுகாப்பு என்பது பற்றிய கவலைகள் இருக்கும். இவை தவிர, அவர்களுக்கு வேறு சில கவலைகளும், பதற்றங்களும் இருக்கும்.
- தன் பெற்றோரின் சந்தோஷம் மற்றும் தனிமை
- மற்ற பிள்ளைகளிடமிருந்து வேறுபட்டு நிற்கிற தம் நிலைமை
- தனித்து விடப்பட்ட உணர்வு
- குடும்பம் உடைந்து போன காரணத்தை பற்றிய கவலை மற்றுய்ம் குழப்பம்
- வாழ்க்கை முறையில் உண்டான மாற்றங்க
தவிர ஒற்றைப் தாய் அல்லது தந்தை வளர்க்கும் டீன் ஏஜ பிள்ளைகளுக்கு குடும்பம் உடைந்து, பிரிகிற போது தாம் ஒதுக்கப்பட்டதாக, ஏமாற்றப்பட்டதாக, அவமானப்படுத்தப்பட்டதாக ஒரு உணர்வு இருக்கும். அந்த வயதிலேயே அவர்கள் மீது குடும்பப் பொறுப்புகள் சுமத்தப்படும். அவர்களைவிட வயதில் சிறிய உடன்பிறப்புகளைப் பார்த்துக் கொள்ள வேண்டிய கூடுதல் பொறுப்பும் சேரும். அப்படியொரு வாழ்க்கை முறை அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தலாம். தவிர, உறவுகளைப் பற்றியும், திருமணத்தைப் பற்றியும் அவர்களது மனத்தில் ஒரு பிரத்தியேக அபிப்ராயம் ஏற்படலாம்.
இந்த வயதில் அவர்களுக்கு எழுகிற கேள்விகளுக்கு சுலபமான எந்த பதிலும் இல்லை. அவர்கள் சந்திக்கிற பிரச்னைகளை மாயமாக்க எந்த வழிகளும் இல்லை. ஒற்றைஅம்மாக்களும், அப்பாக்களும் எதிர்கொள்கிற அனைத்துப் பிரச்னைகளையும் ஒரே தீர்வில் சரிப்படுத்திவிடச் செய்கிற வித்தைகள் இருப்பதில்லை. ஆனாலும் ஒற்றைப் தாய் அல்லது தந்தையாக இருப்போர் நடைமுறையில் கையாளக் கூடிய சில வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றுவது சற்றே சிரமம் என்றாலும், நிச்சயம் கை கொடுக்கக் கூடிய வழிகள் அவை.
என்ன செய்யலாம்?
- உங்களுடைய உடல், மனம், ஆத்மா என எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்துக் கொள்ளத் தவறாதீர்கள். இதைச் செய்யத் தவறும் பட்சத்தில் நீங்கள் உங்கள் உறவை இன்னும் சிக்கலாக்கிக் கொள்கிறீர்கள் என்றே அர்த்தம். போதிய ஓய்வெடுங்கள். நன்றாக சாப்பிடுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள். உங்கல் ஆரோக்கியத்தை பராமரித்திதுக்கொள்ளுங்கள்
- உங்களுக்கென ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் சக ஊழியர்களாக, பொதுவிடங்களில் சந்திக்கிறவர்களாக, உங்களைப் போலவே சிங்கிள் பேரன்ட்டாக..... இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். தனிமை இல்லாதவரை, ஒற்றை பெற்றோராக இருப்பதொன்றும் அத்தனை சிரமமான காரியமல்ல என உணருங்கள். அவர்களிடம் தேவையான போது உதவிகள் கேட்கத் தயங்காதீர்கள். நீங்கள் மிகவும் மனமுடைந்து, உற்சாகமிழந்து, தன்னம்பிக்கை சிதைந்து காணப்படுகிற வேளைகளில் உங்கள் நண்பர்கள் உங்களை உற்சாகப்படுத்தி உங்கள் மனநிலையை மாற்றுவதை அனுமதியுங்கள்
- உங்கள் டீன் ஏஜ மகன் அல்லது மகளிடம் அவனை (ளை) நீங்கள் அளவு கடந்து நேசிப்பதாக வார்த்தைகளிலும், செயல்களிலுமாக வெளிப்படுத்துங்கள். உங்கள் குழந்தை செய்கிற எல்லா முயற்சிகளையும் அங்கீகரியுங்கள். உங்கள் குழந்தைகளிடம் அவர்கள் தனித்துவமும், நல்ல மதிப்புகளும், அன்பும் கொண்ட அருமையான பிள்ளைகளாக வருவார்கள் என அடிக்கடி சொல்லுங்கள். எல்லைகள் கடந்து அவர்களை நேசியுங்கள்.
- உங்கள் பிள்ளைகளுக்கு மிகச் சிறந்த உதாரணமாக இருங்கள். அப்போதுதான் அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும். உங்களது நல்ல குணங்களை அவர்களும் பின்பற்றத் தொடங்குவார்கள். உங்களுடைய நம்பிக்கைகளிலும், கொள்கைகளிலும் நீங்கள் எப்போதும் உறுதியாகவும், உண்மையாகவும் இருப்பீர்கள் என்பதை பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள். உங்கள் பிள்ளைகள் னேர்மையாகவும், பொருப்பாகவும், கருணையோடும், நீதியோடும் நடந்து கொள்ள விரும்பினால், நீங்கள் அப்படி வாழ்ந்து காட்டுங்கள்.அவர்களிடம் எப்போதும் உண்மையையே பேசுங்கள். எப்போதும் உங்கள் செயல்களுக்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளத் தயங்காதீர்கள்.
- உங்கள் பிள்ளைகளிடம் நிறைய பேசுங்கள். அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றிய விருப்பங்கள், குடும்பத்தின் கொள்கைகள், எல்லைகள் பற்றி எடுத்துச் சொல்லுங்கள்.
- குடும்பத்தில் முடிவெடுக்கும் சந்தர்ப்பங்களில் உங்கள் பிள்ளைகளையும் இணைத்துக் கொள்ளுங்கள். விதிகளை விதிப்பது மட்டுமல்ல, அவற்றைப் பின்பற்ற வேண்டியதும் அவசியம் என்பதை உணர்த்துங்கள்.
உங்கள் குடும்பத்துக்கென சில வழக்கமான விஷயங்களை, செயல்களை முறைப்படுத்துங்கள். உதாரணத்துக்கு எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பது, படிப்பதற்கான நேரம் ஒதுக்குவது, சரியான நேரத்துக்குத் தூங்கச் செல்வது போன்றவை... குடும்பத்தின் ஒற்றுமையை வலியுறுத்தும் வீட்டு விசேஷங்கள், ஆன்மிக நிகழ்வுகள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள், விடுமுறைக் கேளிக்கைகள், ஞாயிற்றுக் கிழமை விருந்துபச்சாரங்கள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பழக்குங்கள். இவையெல்லாம் தலைமுறைகள் தாண்டியும் அவர்களுக்குள் குடும்ப உறவுகளைப் பற்றிய மதிப்பீடுகளை உணர்ந்து, ஒற்றுமையுடன் வாழக் கற்றுக் கொடுக்கும்.
தினமும் உங்கள் பிள்ளைகளுடன் சிறிது நேரத்தைக் கட்டாயமாக ஒதுக்குங்கள். அந்த நேரத்தை வேறு எந்த தலைபோகிற வேலைக்காகவும் விட்டுக்கொடுக்காதீர்கள். உங்கள் பிள்ளை சொல்வதைக் கேளுங்கள். நிறைய ஊக்கமும், உற்சாகமும் கொடுக்கிற வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். முடிந்தால் அவர்கள் வயதுக்கு மாறி, அவர்களுக்குப் பிடித்தபடியான வேடிக்கையான விஷயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
சந்தோஷத்தையும், அன்பு செலுத்துவதையும் யாரும், யாருக்கும் கற்றுத் தர முடியாது................................................................................................................................................................................................................................................................................
தனிப்பட்ட முறையில் உங்களுக்கு இருக்கும் கோபம், வெறுப்பு, விரக்தி போன்றவற்றைப் பிள்ளைகளின் மேல் காட்டாதீர்கள். கோபம் என்பது உடலையும், உள்ளத்தையும் மட்டுமின்றி, உறவுகளையும் பாதிக்கிற விஷயம். நீங்கள் பேசுகிற வார்த்தைகள் உங்கள் பிள்ளைகளின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு உதவுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.
தன்னுடைய எந்தப் பிரச்னைக்கும் உங்களை அணுகலாம் என்கிற நம்பிக்கையை பிள்ளைகள் உணரும்படி இருக்க வேண்டும் உங்கள் நடவடிக்கை.
உங்களுக்கும், உங்கள் வாழ்க்கைத் துணைக்குமான பிரச்னையில், பிள்ளைகளை உங்கள் வசம் இழுக்கும் முயற்சியில் துணையைப் பற்றிய அவதூறு பேசுவதை செய்யாதீர்கள். அம்மா, அப்பா என இருவரையும் நேசிக்கவும், இருவரின் நேசத்தைப் பெறவும் உங்கள் பிள்ளைகளுக்கு உரிமை உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.
உங்கள் பிள்ளைகளிடம் அளவுக்கு மீறி உங்களது அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
நம்மால் பர்ஃபெக்ட்டான அம்மா அல்லது அப்பாவாக இருக்க முடியவில்லையோ என்கிற தாழ்வு மனப்பான்மையைத் தூக்கிப் போடுங்கள். இந்த உலகத்தில் யாராலும் அப்படி இருக்க முடியாது. எல்லோரிடமும் ஏதோ ஒரு கோளாறு இருக்கும். எல்லோரும் தவறுகள் செய்கிறவர்கள்தான். உங்கள் தவறுகளை உணரவும், அவற்றை உங்கள் வயதுக்கேற்ற முதிர்ச்சியுடன் கையாளவும், மறுபடி அதே தவறுகள் நேராமலிருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். இப்படிச் செய்தீர்களானால் எப்படிப்பட்ட பிரச்னையையும் சர்வசாதாரணமாகக் கையாளவும், எப்படிப்பட்ட சூழலையும் மாற்றவும், உங்கள் பலம் என்ன என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு உணர்த்தவும் உங்களால் முடியும்.
நீங்கள் நம்புகிற விஷயங்களில் உறுதியாக இருங்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கான விதிகளையும், எல்லைகளையும் வரையறுத்து, அவற்றை மீறினால் உண்டாகக் கூடிய பக்க விளைவுகளைப் புரிய வையுங்கள். உங்களுக்கு முடியாத, களைப்பான சந்தர்ப்பங்களில் உங்கள் சுயநலத்துக்காக நீங்கள் உருவாக்கிற அந்த விதிகளைத் தளர்த்த நினைக்காதீர்கள். உங்களைவிட்டுப் பிரிந்து போன துணை, எக்காரணம் கொண்டும் குடும்ப விதிகளை பிள்ளைகள் பின்பற்றுவதில் ஊக்கமாகவோ, ஆதரவாகவோ நிற்கப்போவதில்லை. ஆனாலும் மனம் தளராதீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காதீர்கள்.
அளவுக்கதிகமான சுதந்திரம் கொடுக்காதீர்கள். உங்கள் பிள்ளைகள் அம்மா, அப்பா என இருவரின் அரவணைப்பையும், அருகாமையையும் இழந்து வளர்வது உண்மைதான். அந்தக் குறையை ஈடுகட்டும் வகையில் அவர்களுக்கு அதீத செல்லமும், சலுகைகளும் கொடுக்காதீர்கள். உங்கள் இரக்கத்தை சாதமாக்கிக் கொண்டு, நினைத்ததை சாதித்துக் கொள்ள முயல்கிற அவர்களது மனோபாவத்தை ஊக்கப்படுத்தாதீர்கள்.
பெரும்பாலான சிங்கிள் பேரன்ட்டுகளுக்கு பொருளாதாரச் சிக்கலை எதிர்கொள்வதுதான் மிகப் பெரிய சவால். பலரும், அதை ஈடுகட்ட முன்பைவிட அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். அதைக் காரணம் காட்டி, உங்கள் பிள்ளைகளுடன் செலவிடுகிற நேரத்தைத் தவற விடாதீர்கள். பிள்ளைகளுடன் பேச, அவர்கள் பேசுவதைக் கேட்க நீங்கள் ஒதுக்க வேண்டிய நேரம் மிகமிக முக்கியமானது, அவசியமானது.
அம்மா, அப்பா என இருவரும் சேர்ந்திருக்கிற குடும்பங்களில் இருவருக்கும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பிள்ளைகளைப் பற்றிய சேதிகள் வந்து சேரும். இருவருக்குமிடையே கருத்துப் பரிமாற்றங்கள் இருக்கும். அது சாத்தியமில்லாத ஒற்றைத் தாய் தந்தையர் , தனக்கு ஆதரவையும், நல்ல ஆலோசனைகளையும் கொடுக்கக் கூடிய ஒரு உறவு அல்லது நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம். தனி நபராக நீங்கள் சந்திக்கிற பிரச்னைகளை அவர்களிடம் பகிர்ந்து கொண்டு, கருத்து கேட்கலாம். உங்களது மனதுக்கு நெருக்கமான உறவினர் யாரேனும் ஒருவரை வாரம் ஒரு முறையோ, இரு முறையோ சந்தித்து உங்கள் தன்னம்பிக்கைக்கு சார்ஜ ஏற்றிக் கொள்ளலாம். கடவுள் நம்பிக்கை இருந்தால், அதற்கான நேரம் ஒதுக்கவும் தவற வேண்டாம்.
கடைசியாக ஒரு விஷயம்....
ஆரோக்கியமான குடும்பத்துக்கான ஆதாரம் குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை அல்ல. ஒற்றை ஆளாக இருந்தாலும் நீங்கள் உங்கள் குடும்பத்தின் மேல் காட்டுகிற அக்கறைதான் பெரிது. குடும்ப நபர்களுக்கிடையிலான உரையாடல்கள் நிற்கும் போதும், தடைப்படும்போதும், அன்பின்றி நடந்து கொள்ளும் போதும், அனாவசிய சண்டைகளுக்கு அடிபோடும் போதும் தான் ஒரு குடும்பம் உடைகிறது. அதை நடக்க விடாமல் செய்வது உங்கள் கைகளில்தான் உள்ளது.